அமெரிக்க சூறாவளியில் சிக்கிய இந்திய இளம்பெண்ணுக்கும் நண்பருக்கும் நேர்ந்த பரிதாபம்: குடும்பத்தினரின் கண்ணீர் கோரிக்கை
அமெரிக்காவை துவம்சம் செய்த ஐடா சூறாவளிக்கு 63 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், இந்திய இளம்பெண் ஒருவரும் அவரது நண்பரும் மாயமாகியுள்ளனர்.
கடந்த மாதம் 29ஆம் திகதி ஐடா என பெயரிடப்பட்ட சூறாவளி ஒன்று அமெரிக்காவைத் தாக்கிய நிலையில், அதன் பாதிப்புகள் இன்று வரை தொடர்கின்றன.
சூறாவளி தாக்கி ஒரு வாரம் ஆன நிலையில் சுமார் 63 பேர் பலியாகியுள்ளார்கள், 600,000 பேர் வரை மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சூறாவளியைத் தொடர்ந்து நான்கு பேரைக் காணவில்லை. காணாமல் போனவர்களில் இந்தியர்களான கல்லூரி மாணவர்கள் இருவரும் அடங்குவர்.
Nidhi Rana (18) என்ற இளம்பெண்ணும் அவரது நண்பரான Ayush Rana (21)ம் சென்ற கார், பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த இருவரது பெயர்களும் ஒரே போல இருந்தாலும், அவர்கள் உறவினர்கள் இல்லை. இருவரின் குடும்பத்தினரும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
பல படகுகளில் மீட்புக்குழுவினர் அவர்களைத் தேடி வரும் நிலையில், அவர்களது படங்கள் இடம்பெற்றுள்ள போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
பிள்ளைகளைக் காணாமல் அவர்களது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவர்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக பிரார்த்திக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.