ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்தது எப்படி? இலங்கை கேப்டன் ஷனகா விளக்கம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது குறித்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா விளக்கம் அளித்துள்ளார்.
அதிர்ச்சித் தோல்வி
ஹம்பன்டோடவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது.
முதலில் ஆடிய இலங்கை அணியில் அசலங்கா 91 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 51 ஓட்டங்களும், நிசங்கா 38 ஓட்டங்களும் எடுக்க, 269 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
@ICC (Twitter)
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கினை எட்டியது. இப்ராஹிம் ஜட்ரான் 98 ஓட்டங்களும், ரஹ்மத் ஷா 55 ஓட்டங்களும் விளாசினர். தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான மதீஷா பத்திரனா 66 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
@ICC (Twitter)
ஷானகாவின் விளக்கம்
போட்டி முடிந்த பின்னர் தோல்வி குறித்து பேசிய இலங்கை கேப்டன் ஷனகா, 'நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடுவது தான் திட்டம் என்று நினைத்தேன், ஆனால் டாப் ஆர்டரில் நான்கு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்ததால் பெரிதாக ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை.
அது நாங்கள் 300க்கும் அதிகமான ஓட்டங்களை குவிக்கக் கூடிய விக்கெட். மேலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
லஹிரு குமராவின் காயத்தினால் உதவி கிடைக்கவில்லை. பத்திரனாவுக்கு ஐபிஎல்லில் இருந்து நேரடியாக வருவது எளிதானது அல்ல, குறிப்பாக 50 ஓவர் ஆட்டத்தை விளையாடுவது. ஆனால் இது அவருக்கு மிகச்சரியான விளையாட்டு.
எனவே நாங்கள் நிச்சயமாக அவருடன் தொடர்வோம். நாம் வெற்றி பெற வேண்டும், ஆனால் முக்கியமாக தகுதிச் சுற்றுக்கு தயாராக வேண்டும். பந்துவீச்சாளரைகளை மாற்றுவோம், ஆனால் துடுப்பாட்ட வரிசை அப்படியே இருக்கும்' என தெரிவித்துள்ளார்.