2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - போட்டி தொடங்கும் திகதிகள் அறிவிப்பு
லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
128 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது.
லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில், T20 வடிவத்தில் கிரிக்கெட் நடைபெற உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மட்டும் இடம் பெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானம், திகதி
கிரிக்கெட் போட்டிகளானது, லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டிகள், 2028 ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி, ஜூலை 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 14 மற்றும் 21 ஆம் திகதிகளில் மட்டும் போட்டிகள் நடைபெறாது. ஜூலை 20 மற்றும் ஜூலை 29 அன்று பதக்க போட்டிகள் நடைபெற உள்ளது.
ஒரு நாளுக்கு 2 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நேரப்படி முதல் போட்டி காலை 9:00 மணிக்கும் (இந்தியா நேரப்படி இரவு 9:30) 2வது போட்டி மாலை 6:30 மணிக்கும் (இந்தியா நேரப்படி மறுநாள் காலை 7:00) தொடங்கும்.
எந்த அடிப்படையில், அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெரும் என்பதை ஐசிசி தீர்மானிக்கும்.
முன்னதாக, 1900 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றது.
இதில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகள் மட்டுமே பங்கு பெற்றன. இதில், இங்கிலாந்து அணி 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |