மாமனார் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம்! மருமகளே தீர்த்து கட்டியது அம்பலம்... வெளியான அதிர்ச்சி காரணம்
தமிழகத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவரை மருமகளே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கேளல் கிராமத்தைச் சேர்ந்த வினோபாராஜனுக்கும், கனிமொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கு குழந்தைகள் இல்லாமல் விரத்தியில் இருந்து உள்ளனர்.
இந்த நிலையில் மருமகள் கனிமொழிக்கு, மாமனார் முருகேசன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருமகள் கனிமொழி தனது கணவர் வினோபா ராஜனிடம் பலமுறை கூறியுள்ளார்.
அதற்கு தனது தந்தை அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று மழுப்பலாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாமனாரின் பாலியல் சீண்டல்கள் நாளுக்குநாள் அத்துமீறியதையடுத்து அவரை கொலை செய்வது என முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ஜூலை 31-ம் திகதி இரவு மாமனாருக்கு உணவு கொடுக்கும்போது குழம்பில் எலிபேஸ்ட் மற்றும் கருணை மருந்து இரண்டையும் கலந்துக்கொடுத்துள்ளார்.அதனை சாப்பிட்ட முருகேசன் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி மறுநாளே இறந்துவிட்டார்.
யாருக்கும் எதுவும் சந்தேகம் வராததால் முருகேசனுக்கு இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தது. உணவில் விஷம் வைத்து கொலை செய்த மருமகள் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் தொடர்ந்தும் மறைத்து வந்துள்ளார்.
மாமனாரை கொலை செய்ததால் மருமகள் கனிமொழி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் பொலிசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கனிமொழியை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.