104 இலக்கை எட்ட போராடிய தென் ஆப்பிரிக்கா..சிக்ஸர் அடித்து முடித்த 'கில்லர் மில்லர்'
நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்ட்மேன் மிரட்டல் பந்துவீச்சு
நியூயார்க்கில் நடந்த இப்போட்டியில் முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்தது.
சைபிராண்ட் ஏங்கெல்பிரெட் 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்தார். ஒட்டனில் பார்ட்மேன் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
விக்கெட்டுகள் சரிவு
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் பந்திலேயே நெதர்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. குவிண்டன் டி காக் பந்தை சந்திக்காமலே ரன்அவுட் ஆனார்.
Baartman is the man! ⚡️
— Proteas Men (@ProteasMenCSA) June 8, 2024
Another impressive day out with the ball for the Proteas quick. #WozaNawe #BePartOfIt #OutOfThisWorld #T20WorldCup pic.twitter.com/8jKgwWFxGv
அடுத்து வான் பீக் பந்துவீச்சில் ஹென்றிக்ஸ் (3) கிளீன் போல்டு ஆனார். பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் மார்க்ரம் டக் அவுட் ஆன நிலையில், கிளாசென் 4 ஓட்டங்களில் வெளியேற, தென் ஆப்பிரிக்கா 12-4 என தடுமாறியது.
கில்லர் மில்லர்
அப்போது கைகோர்த்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் கூட்டணி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஸ்டப்ஸ் 37 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லீடே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அணியின் வெற்றிக்கு 9 பந்துகளில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது 49 ஓட்டங்களில் இருந்த டேவிட் மில்லர் (David Miller) பவுண்டரி, சிக்ஸர் விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
அவர் 51 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் விளாசினார். நெதர்லாந்து தரப்பில் கிங்மா, வான் பீக் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |