இரவில் கேட்ட அழுகுரல்... சடலமாக மீட்கப்பட்ட மூன்று சகோதரிகள்: தாயார் மீது சந்தேகம்
நியூசிலாந்தின் திமரு பகுதியில் ஹொட்டல் தனிமைப்படுத்தலை முடித்த சில நாட்களில் மூன்று சிறுமிகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமிகளை கொலை செய்ததாக நம்பப்படும் பெண் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 10 வயது எனவும் எஞ்சிய இருவர் இரட்டையர்கள் எனவும், அவர்களுக்கு 3 வயது எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமரு பகுதியில் உள்ள குயின் சாலையில் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், சிறுமிகள் மூவரையும் சடலமாக மீட்டதுடன், அவர்களின் தாயார் என கருதப்படும் பெண் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு திமரு பகுதி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சம்பவம் நடப்பதற்கும் சில நிமிடங்கள் முன்பு அழுகுரல் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அழுகுரல் கேட்ட சில நிமிடங்களில் கதவு பலமாக சாத்தப்படும் சத்தம் கேட்டதாகவும் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த குடும்பமானது சமீபத்தில் தான் தென்னாபிரிக்காவில் இருந்து நியூசிலாந்துக்கு வந்துள்ளது. மேலும், அவர்களுக்கு நியூசிலாந்தில் மிக சொற்ப தொடர்புகளே உள்ளனர் எனவும் பொலிஸ் தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தமது பிள்ளைகளுக்கு சிறந்ததாக கருதப்படும் பள்ளிகள் தொடர்பிலும் சமூக ஊடகத்தில் குறித்த தாயார் ஆலோசனை கேட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த தாயாரிடம் விசாரணை முன்னெடுத்த பின்னரே, இந்த விவகாரத்தின் உண்மை பின்னணி தெரியவரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சாலை விபத்து ஒன்றில் சிக்கி 5 இள வயது சிறுவர்கள் மரணமடைந்ததே, கடந்த பல ஆண்டுகளில் திமரு பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய துயரமாக பார்க்கப்படுகிறது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        