சவப்பெட்டிக்குள்ளிருந்து வந்த சத்தம்: தாய்லாந்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்
தாய்லாந்தில் பெண்ணொருவரின் உடல், தகனம் செய்யப்படுவதற்காக சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
சவப்பெட்டிக்குள்ளிருந்து வந்த சத்தம்
தாய்லாந்திலுள்ள Phitsanulok என்னுமிடத்தைச் சேர்ந்த Chonthirat Sakulkoo (65), இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார்.

இரண்டு நாட்களாக அவர் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கவே, அவர் இறந்துவிட்டதாக கருதிய அவரது சகோதரரான Mongkol Sakulkoo, அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, தன் சகோதரி உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறியுள்ளார்.
ஆனால், அவரிடம் முறையான இறப்புச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, Nonthaburi என்னுமிடத்தில் உள்ள ஒரு கோவிலில் இலவசமாக இறுதிச்சடங்குகள் செய்வதைக் குறித்து கேள்விப்பட்ட Mongkol, தன் சகோதரியின் உடலை அங்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், அங்குள்ளவர்களும் இறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் இறுதிச்சடங்கு செய்யமுடியாது என்று கூறியுள்ளனர்.
கோவில் ஊழியர் ஒருவர், இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி என Mongkolஇடம் விவரித்துக்கொண்டிருக்க, திடீரென சவப்பெட்டிக்குள்ளிருந்து ஏதோ சத்தம் வந்துள்ளது.
உடனடியாக சவப்பெட்டியை அவர்கள் திறந்து பார்க்க, உள்ளே Chonthirat கண்களை லேசாக திறந்தபடி, சவப்பெட்டியின் உள்பக்கத்தைத் தட்டிக்கொண்டிருந்திருக்கிறார்.
உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அந்த கோவில் நிர்வாகிகள், அவரது மருத்துவச் செலவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக Mongkolஇடம் உறுதியளித்துள்ளார்கள்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Chonthiratஇன்உடலில் இரத்த சர்க்கரையின் அளவு குறைந்ததால் அவர் hypoglycemia என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சையளித்து, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும், அவரை அவரது சகோதரருடன் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள் மருத்துவர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |