கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பில் சிக்கிய மருத்துவ ஊழியர்கள்: 25 ஆண்டுகள் சிறை செல்ல நேரலாம்...
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பில் எட்டு மருத்துவ ஊழியர்கள் மீது வழக்கு விசாரணை துவங்க உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், அவர்கள் 25 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடலாம்.
2020ஆம் ஆண்டு, மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மரடோனாவுக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தனது வீட்டிலிருந்தவண்ணம் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், 2020ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 25ஆம் திகதி, அதாவது, அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தார்கள். மரடோனாவின் மரணம் அர்ஜெண்டினாவிலும், உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போதே, அவரது மருத்துவர்கள் அவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது.
இந்நிலையில், மரடோனாவை கவனித்துக்கொண்ட மருத்துவ ஊழியர்களை நீதிமன்ற விசாரணைக்குட்படுத்துவது என அர்ஜெண்டினா நீதிமன்றம் ஒன்று நேற்று முடிவு செய்துள்ளது.
ஆகவே, 2023இல் எட்டு மருத்துவ ஊழியர்கள் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள்.
கவனக்குறைவு காரணமாக உயிரிழப்பு அல்லது, மரணம் நிகழும் என்று தெரிந்தும் அதைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் மரடோனாவின் மருத்துவரான Leopoldo Luque, அவரது மன நல மருத்துவரான Agustina Cosachov, மனோவியல் ஆலோசகரான Carlos Diaz மற்றும் சிகிச்சை ஒருங்கிணைப்பாளரான Nancy Forlini ஆகியோர் அடங்குவர்.
இவர்களில், மரடோனாவின் மருத்துவரான Leopoldo Luque மீது, ஆவணம் ஒன்றில் மரடோனாவின் கையெழுத்தைப் போலியாக போட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.