தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்பு 39 ஆக உயர்வு : கமல் ஹாசன் வேதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு கமல் ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து மரணம்
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கமல் வேதனை
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.
தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |