கணவரின் வெட்டப்பட்ட தலையுடன் காவல் நிலையம் சென்ற பெண்: அம்பலமான ஐ.எஸ் கும்பலின் வெறிச்செயல்
மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் ஆதரவு கும்பல் ஒன்று கிறிஸ்தவ மத போதகரின் தலையை வெட்டி அவரது மனைவிக்கு அனுப்பி வைத்த கொடூரம் நடந்துள்ளது.
மொசாம்பிக் நாட்டின் எண்ணெய் வளம்மிக்க Cabo Delgado பிராந்தியத்தில் குறித்த கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது.
கடந்த புதன்கிழமை பெண் ஒருவர், அவரது கணவரின் வெட்டப்பட்ட தலையுடன் மாகாண காவல்துறை தலைமையகம் சென்று முறையிட்டுள்ளார். வெட்டப்பட்ட தலையுடன் காவல் நிலையம் சென்று முறையிட ஐ.எஸ் ஆதரவு கும்பல் தம்மை கட்டாயப்படுத்தியதாகவும், தலை வெட்டப்பட்ட நிலையில், தமது கணவரின் சடலத்தை வயல்வெளியில் கண்டெடுத்ததாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
Cabo Delgado பிராந்தியத்தில் 2017 முதல் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத கும்பலால் தொடர்ந்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3,340 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 800,000 மக்கள் வேறு மாகாணங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஐ.எஸ் கும்பல் பால்மா நகரில் திடீரென்று முன்னெடுத்த கொடூர தாக்குதலில் டசின் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் ஆபிரிக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் சுமார் 3,100 பேர்கள் மாகாணத்தின் வட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தாக்குதல் நடவடிக்கைகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.