‘ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனம்’! பிரபல நாட்டின் இராணுவத்திற்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை
பர்மா என்றும் அழைக்கப்டும் மியான்மர் நாட்டில் ஆட்சியை கவிழ்க்க முயன்றால், அதற்கு எதிராக அமெரிக்க நடவடிக்கை எடுக்கும் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 2020-ல் மியான்மரில் நடந்த பொதுத் தேர்தலில் National League for Democracy கட்சியின் ஆங் சான் சூகி வெற்றிப்பெற்றார்.
ஆனால், பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக அந்நாட்டு இராணுவம் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், திங்கட்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்ட மியான்மர் இராணுவம், மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த மற்ற மூத்த தலைவர்கள் அனைவரையும் சிறை பிடித்து தடுப்பு காவலில் வைத்துள்ளது.
மேலும், மியான்மரில் ஒரு வருடத்திற்கு அவரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மியான்மர் விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் Jen Psaki வெளியிட்ட அறிக்கையில், பர்மாவில் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் பிற தலைவர்கள் கைது செய்யப்பட்டது உட்பட நாட்டின் ஜனநாயக மாற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த பர்மிய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது என்ற வெளிவரும் செய்திகளால் அமெரிக்கா கவலையடைந்துள்ளது.
மியான்மர் விவகாரம் குறித்து ஜனாதிபதி பைடனுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் விளக்கமளித்துள்ளார்.
பர்மாவின் ஜனநாயகத்திற்கான எங்கள் வலுவான ஆதரவை நாங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்துகிறோம், ஜனநாயக விதிமுறைகளையும் சட்டத்தையும் கடைப்பிடிக்கும் படியும், இன்று சிறைபிடித்து தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என பர்மா இராணுவம் மற்றும் மற்ற அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
சமீபத்திய தேர்தல்களின் முடிவை மாற்ற அல்லது மியான்மரின் ஜனநாயக மாற்றத்திற்கு தடையாக இருக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா எதிர்க்கிறது, மேலும் இந்த நடவடிக்கைகளை திரும்ப பெறாவிட்டால் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
பர்மாவில் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம், பர்மா மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் Jen Psaki அறிக்கை வெளியிட்டுள்ளார்.