இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்... தலிபான் போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி உத்தரவு
நாட்டில் உள்ள தலிபான் போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் புதிததாக ஆட்சியமைத்துள்ள தலிபான் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் வியாழக்கிழமை மாலை ஆடியோ செய்தியில் உத்தரவிட்டார்.
அதாவது, தலிபான் தலைமை அறிவித்த பொது மன்னிப்பை மதிக்குமாறு அனைத்து தலிபான் படைகளுக்கும் உத்தரவவிட்டார்.
பொதுமன்னிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் யாரையும் பழிவாங்க யாருக்கும் அனுமதி இல்லை என்று யாகூப் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சனை உள்ள தாலிபான் போராளிகள், அதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று அங்கு தான் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
தனிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களை தலிபான் படைகள் கொன்றதாக கேள்விப்பட்டேன், இனி இதுபோன்ற சம்பவங்கள் பொறுத்துக் கொள்ளப்படாது என்றும் யாகூப் கூறினார்.
தலிபான் படைகளால் சில குடும்ப உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, பல முன்னாள் பாதுகாப்புப் பணியாளர்களின் குடும்பங்களின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சரின் இந்த உத்தரவு வந்துள்ளது.