கண்காணிப்பில் இருந்து தப்பிக்க பயங்கரவாதிகள் பயன்படுத்திய Dead Drop நுட்பம்
டெல்லி குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றத்திற்கு Dead Drop மின்னஞ்சல் நுட்பத்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில், டெல்லியில் i20 காரின் உள்ளே இருந்து அதை வெடிக்க செய்த மருத்துவர் உமர் முஹமது சட்டவிரோத வழிகளில் ரூ.20 லட்சம் பணத்தை ரொக்கமாக பெற்றுள்ளார்.
அதனை வைத்து ஹரியானாவின் நூவில் உள்ள ஒரு சந்தையில் இருந்து ரொக்கமாக பணம் செலுத்தி, அதிக அளவு உரங்களை வாங்கியது தெரிய வந்துள்ளது.
டெட்-ட்ராப் மின்னஞ்சல்
அதே போல் தங்கள் தகவல் தொடர்பிற்கு டெலிகிராம் மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த திரீமா செயலியையும்பயன்படுத்தியது தெரிய வந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர்கள் முசம்மில் ஷகீல், உமர் முகமது மற்றும் ஷாஹீத் சயீத், டெட்-ட்ராப் மின்னஞ்சல் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
டெட்-ட்ராப் என்பது உளவாளிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் தங்கள் உரையாடலை மற்றவர்கள் கண்டறிதலைத் தவிர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
டெட்-ட்ராப் மின்னஞ்சல் என்பது 2 நபர்கள் ஒருவருக்கொருவர் மின்னஞ்சல் அனுப்பாமலே தொடர்பு கொள்ளும் ஒரு நுட்பமாகும்.
இதில் ஒரே ஒரு மின்னஞ்சலையே இருவரும் பயன்படுத்திக்கொள்வார்கள்.

இதில் மின்னஞ்சல்கள் அனுப்புவதற்கு பதிலாக, அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சு செய்துவிட்டு, அனுப்பாமல் Draft ல் சேமித்து கொள்வார்கள்.
அந்த தகவலை படிக்க வேண்டிய நபர், மின்னஞ்சல் கணக்கின் உள்ளே நுழைந்து, Draft-இல் உள்ளதை படித்து விட்டு, அழித்து விடுவார். பதில் அளிக்க வேண்டியதை அதே போல், அனுப்பாமல் Draft-இல் சேமித்து விடுவார்.
மின்னஞ்சல்கள் அனுப்பினாலோ, அனுப்பிய பின்னர் அதை அழித்தலோ கூட அதனை புலனாய்வு துறையினரால் கண்டறிய முடியும்.
ஆனால் இவ்வாறு டெட்-ட்ராப் நுட்பத்தில் தகவல் பரிமாறுவதன் மூலம், புலனாய்வு பிரிவினரால் என்ன தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள் என்பதை கண்டறியவே முடியாது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |