இரவோடு இரவாக 400 பேர்கள் கைது... ரயில்கள் ரத்து, இணைய சேவை முடக்கம்: ஸ்தம்பித்த டெல்லி
400 Detained Overnight Before CJP's Delhi Protest: CJP-ன் டெல்லி போராட்டத்திற்கு முன்னதாக 400 பேர் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறது.
400க்கும் மேற்பட்டோர்
இதனையடுத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக, காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட வீரர்களைப் பணியில் ஈடுபடுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வழிவகுத்த வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களின்போது ஜூலை 20-அன்று நிகழ்ந்த குழப்பம் மற்றும் காவல் துறை நடவடிக்கை ஆகியவை இரு தரப்பினரின் மனதிலும் இன்னும் பசுமையாக உள்ள நிலையில், இந்தப் போராட்டம் மாறுபட்ட விதத்தில் அமையக்கூடும்.
CJP போராட்டத்திற்கு இதுவரை காவல்துறை அனுமதி வழங்கவில்லை, மேலும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். தலைநகர் முழுவதும் குற்றவாளிகள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ் சௌக், புது டெல்லி, சென்ட்ரல் செக்ரடேரியட், படேல் சௌக் மற்றும் காஷ்மீர் கேட் உள்ளிட்ட 45 டெல்லி மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளது.
மேலும், சனிக்கிழமை காலை 4 மணி முதல் மதியம் 2 மணிக்குள் புது டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையங்களுக்கு வந்து சேரவிருந்த உள்ளூர் ரயில்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரும் 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல், ஜன்பத்-கர்த்தவ்யா பாதை சந்திப்பைச் சுற்றியுள்ள 4 கி.மீ சுற்றளவில் இணைய சேவைகளும் 24 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தன்னார்வலர்களும் ஆதரவாளர்களும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்று CJP நிறுவனர் அபிஜீத் டிப்கே தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் மண்டலமாக
ஒருபுறம், போராட்டங்கள் சிரமத்தை ஏற்படுத்தும் என்கிறீர்கள். மறுபுறம், மெட்ரோவையும் ரயில் சேவையையும் முடக்கி, சாலைகளை மறித்திருக்கிறீர்கள். இது சிரமத்தை ஏற்படுத்தாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, காவல்துறையின் பாதுகாப்புத் திட்டத்தில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளதாகவே கூறுகின்றனர். சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் போராட்டத்தைக் கையாள்வதில் தங்கள் தரப்பு நடவடிக்கைகள் மீண்டும் விமர்சனங்களுக்கு வழிவகுக்காமல் இருப்பதை உறுதி செய்தல்.

புது டெல்லி மாவட்டத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கவும், தடைசெய்யப்பட்ட பகுதிகளிலிருந்து அவர்களை விரைவாக வெளியேற்றவும் வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் தெளிவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி காவல்துறை சுமார் 1.5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட பகுதியை மிக அதிக அச்சுறுத்தல் கொண்ட மண்டலமாக அடையாளம் கண்டுள்ளது. இந்தப் பகுதி ஜந்தர் மந்தர், ஜன்பத், தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் டெல்லி காவல் துறை தலைமையகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை உள்ளடக்கியது.

இந்தப் பகுதியில் 6,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் அல்லது மத்திய ஆயுதப் படையினர் நிறுத்தப்பட்டு, இப்பகுதி பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நிலவரங்களைக் கண்காணிக்க உதவும் வகையில், புது டெல்லி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒலிப்பதிவு வசதி கொண்ட 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன; போராட்ட இடத்திற்குச் செல்லும் சாலையில் குறைந்தது ஏழு அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இறுதி அடுக்குகளில் சில, உடைத்து ஊடுருவுவதைக் கடினமாக்கும் வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் உறுதி என்றே CJP நிறுவனர் அபிஜீத் டிப்கே தெரிவித்துள்ளார்.