உக்ரைன் ட்ரோன்களுக்கு இலக்கான ரஷ்ய நிறுவனத்தின் இரண்டாவது டேட்டா சென்டர்
Yandex says second data centre hit by drone attack: இரண்டாவது தரவு மையம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக யாண்டெக்ஸ் (Yandex) தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கலுகா பிராந்தியத்தில் உள்ள தங்களது தரவு மையத்தின் பல தொகுதிகள் ட்ரோன் தாக்குதலால் முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டதாக, யாண்டெக்ஸ் (Yandex) நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்
யாண்டெக்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். மாஸ்கோவிற்கு தென்மேற்கே நடத்தப்பட்ட தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறியுள்ள யாண்டெக்ஸ் (Yandex), நிறுவனத்தின் சில சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையன்று, தலைநகருக்குத் தென்கிழக்கே உள்ள ரியாசான் (Ryazan) பகுதியில் அமைந்துள்ள மற்றொரு யாண்டெக்ஸ் தரவு மையத்தின் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது; இந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்களில் இரண்டு இங்குதான் உள்ளன.
இந்த நிலையில், அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து வருவதாகவும், அந்த உபகரணங்களைச் சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியுமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் யாண்டெக்ஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவும் உக்ரைனும் சமீப மாதங்களாக எரிசக்தி நிலையங்கள், சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள், எண்ணெய் மற்றும் தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், மின்னணு வர்த்தகக் கிடங்குகள், மிக சமீபத்தில் தரவு மையங்கள் உள்ளிட்ட பொருளாதார இலக்குகள் மீதான ட்ரோன் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளன.
கடந்த ஒரு மாதமாக, மத்திய கீவ்வில் உள்ள இலக்குகள் உட்பட, உக்ரேனிய தரவு மையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், நாங்கள் உரிய முறையில் பதிலடி கொடுத்து வருகிறோம். அவர்கள் எங்களது தரவு மையங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறோம். எல்லா விவரங்களையும் என்னால் பகிர முடியாது என குறிப்பிட்டுள்ளார்.