13 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை மொத்தமாக கிருமி நீக்கம் செய்த நாடு
கொரோனா பெருந்தொற்றின் டெல்டா மாறுபாடு பரவிவருவதை அடுத்து, 13 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை மொத்தமாக கிருமி நீக்கம் செய்துள்ளது சீனா.
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா டெல்டா மாறுபாடு மிக ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பால் வகைப்படுத்தப்பட்டது.
டெல்டா மாறுபாட்டால் பல கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இந்த நிலையில் சீனாவின் Xi’an நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கவே, முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், குறித்த நகரில் டெல்டா மாறுபாடு பரவியுள்ளதுள்ளது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 13 மில்லியன் மக்கள் குடியிருக்கும் Xi’an நகரில் மொத்தமாக கிருமி நீக்கம் செய்ய நிர்வாகிகள் தரப்பு முடிவு செய்துள்ளது. மேலும், குடியிருப்புகளில் ஜன்னல்களை மூடவும், கட்டடத்தின் மேற்பரப்புகளைத் தொடுவதைத் தவிர்க்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தெருக்களில் உள்ள தாவரங்களைத் தொட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளின் ஒருபகுதியாக தனியார் கார்களுக்கு சாலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கும் 150 பேர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே, நகரம் மொத்தமாக கிருமி நீக்கம் செய்ய அதிகாரிகள் தரப்பு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, பிப்ரவரி 4ம் திகதி முதல் 2022ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங் நகரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்களன்று மட்டும் சீனாவில் 162 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் Xi’an நகரில் மட்டும் 150 பேர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.