ரொறன்ரோ விமான நிலையத்தில் விபத்தில் சிக்கிய விமானம்... காயங்களுடன் தப்பிய பலர்
ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம்
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 15 பேர்கள் வரையில் காயமடைந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மினியாபோலிஸிலிருந்து வந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர உதவி குழுக்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பெரும்பாலான பயணிகள் காயமின்றி வெளியேற்றப்பட்டுள்ளனர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக ஒன்ராறியோவில் உள்ள பீல் பிராந்திய காவல்துறையின் கான்ஸ்டபிள் சாரா பாட்டன் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்துள்ள 15 பேர்களில், மூவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும் எஞ்சியவர்கள் லேசான மற்றும் மிதமான காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையை முன்னெடுக்கும்
இதனிடையே, ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தின் வலைத்தளத்தில், நான்கு டசினுக்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்து தொடர்பில் முதன்மையான இரு அமைப்புகள் விசாரணையை முன்னெடுக்கும் என கனடா அறிவித்துள்ளது. ஜனவரி மாத இறுதியில் வட அமெரிக்காவில் நடந்த சில சமீபத்திய விபத்துகளுக்குப் பிறகு கனடாவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டனில் பயணிகள் விமானம் மீது ராணுவ ஹெலிகொப்டர் மோதியதில் 67 பேர் மரணமடைந்தனர். மட்டுமின்றி, பிலடெல்பியாவில் மருத்துவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |