முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவர்.., இருவர் உயிரிழந்ததால் தலைமறைவு
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவரால் இருவர் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இருவர் மரணம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், கான்பூரில் டாக்டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்துவமனைக்கு இளம் பொறியாளர் இருவர் முடி மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
இவர்களில் ரூக்காபாத்தை சேர்ந்த பொறியாளர் மயங்க் கட்டியார் என்பவர் கடந்த நவம்பர் 18-ம் திகதி அன்று டாக்டர் அனுஷ்கா திவாரியிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இவர் அடுத்த நாளே முகம் வீங்கி நவம்பர் 19-ம் திகதி உயிரிழந்தார்.
அதேபோல கான்பூர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த பொறியாளர் வினீத் துபேவும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மார்ச் 15-ம் திகதி அன்று உயிரிழந்தார்.
இதனால் இருவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் முதலமைச்சர் ஆதித்யநாத்தின் இணையதளத்தில் புகார் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, வினீத் துபேவின் மனைவி கொடுத்த புகார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அனுஷ்கா திவாரியிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பாதிக்கப்பட்ட வேறு சிலரும் புகார் கொடுத்தனர். இதனால் அவரது மருத்துவமனை முற்றுகையிடப்பட்டதால் அவர் தலைமறைவானார்.
இதுகுறித்து கல்யான்பூர் பகுதி காவல் துறை உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே கூறும்போது, "முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த அனுஷ்கா திவாரி பல் மருத்துவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார். தற்போது தலைமறைவானவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |