நாவல் எழுதிவிட்டு... அதைப் போலவே கொலைகள் செய்த கொடூரன்: புகைப்படத்துடன் வெளிவரும் தகவல்
அமெரிக்காவின் டென்வர் நகரில் துப்பாக்கியால் ஐவரை கொலை செய்த நபர் நடுங்கவைக்கும் நாவல்கள் எழுதி வெளியிட்டு, அதைப்போலவே கொலை செய்தவர் என தெரியவந்துள்ளது.
டென்வர் பகுதியில் திங்களன்று துப்பாக்கிதாரி ஒருவர் தெருவில் தென்பட்டவர்கள் ஐவரை கொலை செய்துவிட்டு தப்பிய நிலையில், பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது அந்த நபரை அடையாளம் கண்டுள்ள பொலிசார், அவர் தொடர்பில் நடுங்கவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். Lyndon McLeod(47) என அடையாளம் காணப்பட்ட குறித்த கொலைகாரன் நடுங்கவைக்கும் நாவல்கள் எழுதி வெளியிட்டவர் எனவும்,
அவரது நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே உள்ளூர் டாட்டூ கடைகளில் பணியாற்றும் நபர்களையே அவர் குறிவைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Lyndon McLeod-ஆல் கொலை செய்யப்பட்டுள்ள ஐவரில் மூவர் டாட்டூ கடைகளில் பணியாற்றுபவர்கள் எனவும் எஞ்சியவர்கள் டாட்டூ கடைகளுக்கு அருகாமையில் நின்றவர்கள் என்றே உள்ளூர் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த நபருக்கு புத்தகம் வெளியிடும் ஒரு நிறுவனம் இருந்ததாகவும், அதன்மூலம் சில்லிடவைக்கும் நாவல்களை அவர் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 2018 முதல் 2020 வரையில் மூன்று புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளதாகவும், வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்களை ஆதரித்து அவர் கதைகள் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது கதையின் நாயகன் டாட்டூ கடைகளின் வாடிக்கையாளர்கள் ஊழியர்களை கொலை செய்வது போலவும் அவர் சித்தரித்திருந்தார். மேலும், டாட்டூ தொழிலில் Lyndon McLeod-உம் ஈடுபட்டுள்ளதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் நோக்கம் தொடர்பில் உறுதியான தகவல் இதுவரை இல்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், இது தற்செயலான சம்பவம் அல்ல எனவும், கொல்லப்பட்டவர்கள் கொலைகாரனுக்கு அறிமுகமானவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.