இறுகும் கட்டுப்பாடுகள்... உணவுக்காக வீட்டு உபயோக பொருட்களை பண்டம் மாற்றும் மக்கள்
சீனாவின் ஷியான் நகரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளான மக்கள் வீட்டு உபயோக பொருட்களை உணவுக்காக பண்டம் மாறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு மாகாண நிர்வாகங்கள் கடும்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
3 பேர்களுக்கு மட்டும் அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 1.2 மில்லியன் மக்கள் குடியிருக்கும் Yuzhou நகரத்தை செவ்வாய்க்கிழமை மொத்தமாக ஊரடங்கு நடவடிக்கைக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே டிசம்பர் 23 முதலே கடுமையான கொரோனா கடுப்பாடுகளில் அவதிப்படும் ஷியான் நகர மக்கள் உணவு பற்றாக்குறையால் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இங்குள்ள 13 மில்லியன் மக்களும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்பில் இருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவு பண்டங்களை உள்ளூர் நிர்வாகமே மக்களுக்கு அளித்து வருகிறது.
ஆனால் சமீப நாட்களாக உணவு பற்றாக்குறை என கூறி ஷியான் நகர மக்கள் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். பலருக்கும் உள்ளூர் நிர்வாகத்தின் உதவிகள் கிடைப்பதில்லை எனவும், உணவு தேவைகளுக்காக வீட்டு உபயோக பொருட்களை பண்டம் மாற்றும் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆனால், உள்ளூர் நிர்வாகங்கள் அதை மறுத்துள்ளதுடன், புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டு வருகிறது. 13 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷியான் நகரில் டிசம்பர் 9ம் திகதி முதல் இதுவரை 1,600-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக 12 நாட்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தொற்று பரவல் தரவுகளின் அடிப்படையில் ஊரடங்கு நாட்கள் நீட்டிக்கப்பட உள்ளது.
2019ல் வூஹான் நகரில் இருந்து கொரோனா பரவிய பிறகு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த ஊரடங்காக இந்த 12 நாள் கட்டுப்பாட்டை சீன மக்கள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.