சீனாவை மொத்தமாக... 200 சதவீத வரி விதிப்புடன் மிரட்டும் ட்ரம்ப்
அமெரிக்காவிற்கு இருக்கும் வலுவான வாய்ப்புகளைப் பயன்படுத்தி தாம் விரும்பினால் சீனாவை அழிக்க முடியும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வலுவான வாய்ப்புகள்
உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் சிறப்பான உறவுகளை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும், தாம் விரும்பினார் சீனாவை மொத்தமாக அழித்துவிட முடியும் என எச்சரித்துள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை சந்திப்பதற்கு முன்பு ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார். சீனாவிற்கு அமெரிக்காவை எதிர்கொள்ள சில வாய்ப்புகள் இருக்கலாம், ஆனால் அமெரிக்காவிடம் அதைவிட வலுவான வாய்ப்புகள் உள்ளன என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அப்படியான முடிவிற்கு தாம் ஒருபோதும் வருவதில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் குறிப்பிடும் அந்த வலுவான வாய்ப்பு தொடர்பில் அவர் விளக்கமளிக்கவும் மறுத்துவிட்டார்.
பொருளாதார வலிமையா, அரசியல் செல்வாக்கா அல்லது வேறு ஏதாவது ரகசிய ஒப்பந்தமா என்பது தொடர்பில் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் சமீபத்தில் பேசியதாகவும், இரு நாடுகளும் தங்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதால், சீனாவுக்கு பயணப்படுவது குறித்து யோசித்து வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஜி ஜின்பிங் தம்மை சீனாவிற்கு அழைத்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது இந்த ஆண்டில் நடக்கலாம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கலாம் என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனா உத்தரவாதம்
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், அமெரிக்காவும் சீனாவும் ஆகஸ்ட் 12 அன்று தங்கள் வரி விதிப்பு தொடர்பிலான அறிவிப்புகளை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டன.
இந்த ஆண்டு, ட்ரம்ப் சீனப் பொருட்கள் மீதான வரிகளை மீண்டும் மீண்டும் அதிகரித்துள்ளார், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி 145 சதவீதத்தை எட்டியது. தற்போது, பெரும்பாலான சீன இறக்குமதிகள் 30 சதவீத அமெரிக்க வரியை எதிர்கொள்கின்றன, அதே நேரத்தில் சீனா அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீத வரியை விதித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவிற்கு அரிய பூமி காந்தங்களை வழங்குவதற்கு சீனா உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அல்லது 200 சதவீதம் வரை அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும், இத்தகைய கடுமையான வரிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை கடுமையாக சேதப்படுத்தும் என்பதையும் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். சீனாவுடனான வர்த்தகத்தை பெருமளவு எதிர்பார்க்கும் ட்ரம்ப், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் சீனாவை இதுவரை தண்டிக்கவில்லை.
மாறாக இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்ததுடன், இன்னொரு 25 சதவீத வரி விதிக்க வாய்ப்புள்ளதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |