போர்க்களத்தில் பிரித்தானிய இராணியாருக்கு நன்றி கூறிய உக்ரேனிய வீரர்: வெளியான காரணம்
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்ய டாங்கியை அழித்த உக்ரேனிய இராணுவ வீரர் ஒருவர் இராணியாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் உக்கிரமாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியதற்காக சுமி பிராந்தியத்தைச் சேர்ந்த துருப்புகள் பிரித்தானியாவுக்கு நன்றி தெரிவித்ததுள்ளனர்.
இராணுவ டாங்கிகளை அழிக்கும் அதி நவீன ஏவுகணைகளை பிரித்தானியா நிர்வாகம் சமீபத்தில் உக்ரைனுக்கு வழங்கியிருந்தது. இந்த நிலையில், உக்ரேனிய வீரர் ஒருவர் இராணுவ உடையில் காணொளி ஒன்றை வெளியிட்டு, பிரித்தானிய இராணியாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவருக்கு பின்னால் அழிக்கப்பட்ட நிலையில் ரஷ்ய இராணுவ டாங்கி ஒன்று காணப்படுகிறது. அந்த காணொளியில், பிரித்தானிய இராணியாருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற பொருட்களை மேலும் எங்களுக்கு வழங்குக, நாங்கள் எதிரிகளின் டாங்கிகளை அழித்தொழிக்க தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களில் திறமையானவர்களும் இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்ட அந்த வீரர், ஆனால் தற்போது இராணுவம் மட்டுமே பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
NLAW எனப்படும் டாங்கிகளை அழிக்கும் அதி நவீன 3,615 ஏவுகணைகள் பிரித்தானியா சமீபத்தில் உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. இதனால், முக்கியமான பகுதிகளில் ரஷ்ய துருப்புகளின் நடவடிக்கைகளை தடுக்க முடிந்தது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை அனுப்புவதற்கான திட்டங்களை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
மட்டுமின்றி, உணவு, மருத்துவ உதவிகள், ஆபத்தில்லாத இராணுவ தளவாடங்கள் என போதுமான அனைத்தும் உக்ரைனுக்கு வழங்கப்படும் எனவும் பிரித்தானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.