ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய தமிழக வீராங்கனையிடம் சொல்லப்பட்ட தகவல்! கதறி அழுத பரிதாபம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக வீராங்கனை தனலட்சுமி, அவருடைய அக்கா இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத சம்பவம் மனதை உருக்கியுள்ளது.
மேலும் நாட்டுக்காக விளையாடச் சென்ற மகளின் கவனம் கடுகளவும் சிதறிவிடக் கூடாது என எண்ணிய தனலட்சுமியின் தாயார், மறைவுச் செய்தியைக் கூட மறைத்தது நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
2021-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதில் கலந்துக்கொள்ள தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி என்பவரும் சென்றிருந்தார்.
இந்நிலையில், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தனலட்சுமி பங்கேற்றிருந்த சமயத்தில் அவர் அக்கா கடந்த மாதம் ஜூலை 12ம் தேதின்று திடீரென உயிரிழந்துவிட்டார். ஆனால், தனலட்சுமி வீட்டார் யாரும் இதை அவருக்கு தெரிவிக்கவில்லை.
இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால் அவரால் தாங்க முடியாமல் விளையாட்டுப் போட்டியிலிருந்து கவனம் சிதறி விடுவார் என அக்கா உயிரிழந்த தகவலை குடும்பத்தினர் யாரும் தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டனர்.
தற்போது போட்டி முடிந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பிய தனலட்சுமி, அங்கே வரவேற்க அக்கா ஏன் வரவில்லை எனக் கேட்டுள்ளார். அப்போதுதான் அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை கேட்ட தனலட்சுமி விமான நிலையத்திலேயே நிலைகுலைந்து அழுத சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்ததை கொண்டாடக் கூட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தனலட்சுமியை அவரது தாயார் ஆறுதல்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.