1997ல் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய தர்மேந்திர பிரதான் - இன்று பறிபோன அமைச்சர் பதவி
இன்று நீட் வினாத்தாள் கசிவு காரணமாக அமைச்சர் பதவியை இழந்துள்ள தர்மேந்திர பிரதான், தனது மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியதாக கூறப்படுகிறது.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தது.

இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி, மோடி அரசையே அசைத்து பார்த்துள்ளது. தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
12 ஆண்டுகால மோடி அரசில், ஒரு அமைச்சர் மக்களின் போராட்டதிற்கு பணிந்து பதவியை ராஜினாமா செய்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
தங்களது 3 கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால் நாடு முழுவதும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக CJP அறிவித்துள்ளது.
1997 ல் போராடிய தர்மேந்திர பிரதான்
ஒடிசாவை சேர்ந்த தர்மேந்திர பிரதான் தனது கல்லூரி காலத்திலே RSS அமைப்பின் மாணவர் அமைப்பான ABVPயில் இணைந்து தீவிரமாக பணியாற்றியுள்ளார். 2 முறை ABVPயின் தேசிய செயலாளராக இருந்துள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள ஆர்எம்டி பட்டக் கல்லூரியின் முதல்வராக உள்ள பிரசாந்த் குமார் ரௌட், கல்லூரியில் தர்மேந்திர பிரதானின் ஜுனியராக இருந்துள்ளார்.
தர்மேந்திர பிரதான் குறித்து பேசிய அவர், "1997 ஆம் ஆண்டில் ஒடிசாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் ஜானகி பல்லப் பட்நாயக் முதலமைச்சராக இருந்தார்.
நாங்கள் தலைமைச் செயலகத்தின் முன்பு ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். அங்கு சுமார் 1,500 மாணவர்கள் எங்களுடன் இணைந்தனர்.
போராட்டம் அமைதியாக நடைபெற்றாலும் காவல்துறை எங்களை கடுமையாக தாக்கியது. நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம்.
அப்போது பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்கு சில எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன. வன்முறை நிகழ்ந்தபோதிலும், வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிரதான் தொடர்ந்து போராடியதே, அவரை மாநிலத்தின் மிக முக்கியமான மாணவர் தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது" என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |