தோனி நிச்சயம் விளையாடுவார் - சி.இ.ஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை
அடுத்த சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்று சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை உற்சாகப்படுத்திய தோனி
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நேற்று போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர். தோனிக்கு முழங்காலில் காயத்தால் சிரமப்பட்டு தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தோனி தன் அணி வீரர்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.
ரசிகர்களை பார்த்து புன்னகைத்து கையை உயர்த்தி அசத்தினார். இதைப் பார்த்த ரசிகர்கள் தோனி ஐ லவ் யூ.., தலைவா..., தல... என்று கத்தி ஆரவாரம் செய்தனர்.
இந்த ஐபிஎல் தொடர் தான் தோனிக்கு கடைசியாக இருக்கும் என்று சோகத்தில் ரசிகர்கள் ஆழ்ந்திருந்த நிலையில், திடீரென லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தோனி.
சி.இ.ஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை
இந்நிலையில், தோனி அடுத்த சீசனும் ஆடுவார் என்று சி.இ.ஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், தோனி அடுத்த சீசனும் ஆடுவார். இதில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. ரசிகர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சேப்பாக்கத்தில் கிடைத்த வரவேற்பு அடுத்த ஆண்டும் தோனிக்கு ரசிகர்கள் நிச்சயம் தருவார்கள் என்றார்.