தோனி சென்னையில் கூறிய அந்த ஒற்றை வார்த்தை... சி.எஸ்.கே ரசிகர்கள் உற்சாகம்
நடந்து முடிந்த 14-வது ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா நடத்த சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த பாராட்டு விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் ஒரு முதல்வராக இல்லாமல் தோனியின் ரசிகராக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன்.
எனது தந்தை கருணாநிதியும் தோனியின் ரசிகர்தான். தமிழர்கள் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர் என்று ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து பேசிய தோனி, சென்னை ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான புரிதல் அதிகம் இருக்கிறது.
சென்னை அணியின் ரசிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது பலதரப்பிலும் விரிவடைய வேண்டும். சென்னையில்தான் எனது கடைசி ஐ.பி.எல் போட்டி இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் சரி. அடுத்த 5 ஆண்டுகளாக இருந்தாலும் சரி என்று தோனி பேசியுள்ளார்.
கடைசி டி20 போட்டி சென்னையில்தான் இருக்கும் என்று சென்னையிலேயே தோனி கூறிய நிலையில் தோனி அடுத்த ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.வுக்கு விளையாடுவது உறுதியாகி விட்டது.
இதனால் சென்னை ரசிகிர்கள் உற்சாகத்தில் மிதந்துள்ளனர். தோனியின் பேச்சை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.