தமிழகத்தின் 2 வது பெரிய கிரிக்கெட் மைதானம் - திறந்து வைக்க வரும் தோனி
மதுரையில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க தோனி இன்று மதுரை வருகிறார்.
மதுரை கிரிக்கெட் மைதானம்
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டு துறைக்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உள்ளது. 109 ஆண்டுகள் பழமையான இந்த மைதானத்தில் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.
சென்னை மட்டுமல்லாது, சேலம் மற்றும் கோயம்புத்தூரில் கிரிக்கெட் மைதானங்கள் உள்ளது.
தற்போது மதுரையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன், வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில், 11.25 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ.325 கோடி மதிப்பீட்டில் உருவாக்கபட்டுள்ள இந்த மைதானத்தில், வீரர்களுக்கான பயிற்சி மைதானங்கள், ஓய்வறைகள், உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, விரிவான கார் பார்க்கிங், மழை பெய்தால் விரைவாக போட்டியை தொடங்கும் வகையில் வடிகால் வசதி ஆகிய வசதிகள் உள்ளது.
மேலும், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது 7,300 பேர் அமரும் வசதியுடன் கேலரி கட்டப்பட்டுள்ள நிலையில், முழுமையான திட்டம் நிறைவேறியதும் 20,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணும் வகையில் இருக்கும்.
தோனி வருகை
மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை அருகே இந்த மைதானம் அமைந்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து, 20 நிமிடங்களில் இந்த மைதானத்தை வந்தடையலாம்.
இது சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் 2வது பெரிய மைதானமாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான எம்.எஸ்.தோனி, இந்த மைதானத்தை திறந்து வைக்க இன்று மதுரை வருகிறார்.
மதியம் 1 மணியளவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், இதில் பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில், 15 நிமிடங்கள் தோனி மாணவர்களுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானம் முழுவதுமாக செயல்பாட்டிற்கு வந்த பின்னர், இங்குஐபிஎல், டிஎன்பிஎல் மற்றும் சர்வதேச போட்டிகள் இங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், தென் மாவட்ட கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |