இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்க தோனிக்கு சம்பளம் எவ்வளவு? வெளிப்படுத்திய பிசிசிஐ
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் தோனியின் சம்பளம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளிப்படுத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செப்டம்பர் 8ம் திகதி அறிவித்தார்.
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா , புவனேஸ்வர் குமார், முகமட் ஷமி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட 20 நிமிடங்களில், இந்திய அணி ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.
இதில் தோனி டி20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டுமே ஆலோசகராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட செய்தியை விட தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்ட செய்தி இணையத்தில் பயங்கர வைரலானது.
இந்நிலையில், இந்திய அணி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் தோனியின் சம்பளம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜே ஷா வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ஆலோசனை வழங்க தோனி பணம் ஏதும் வாங்கவில்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 24ம் திகதி சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.