சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் நோய்களில் ஒன்றாகிவிட்டது சர்க்கரை நோய்.
சர்க்கரை நோய் என்பது நோயே அல்ல, அது ஒரு குறைபாடு மட்டுமே.
தொடக்கத்திலேயே இதன் ஆரம்ப அறிகுறிகளின் போது கண்டறிந்துவிட்டு, கட்டுப்படுத்துவதற்கான வாழ்க்கைமுறைகளை பின்பற்றினாலே சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கலாம்.
அப்படியும் மீறி சர்க்கரை நோய் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்? அரிசி சாதத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? எதை இரவில் சாப்பிடக்கூடாது? என்றெல்லாம் பல கேள்விகள் எழலாம்.
Getty Images
இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
கால்சியத்தின் ஆதாரம்
கால்சியத்தின் ஆதாரம் மட்டுமின்றி உடல் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய உணவுகளில் ஒன்று பால்.
இதில் கால்சியம், புரதம், வைட்டமின்கள், தாதுக்களை தாண்டி லாக்டோசும் இருக்கிறது.
பால் அருந்தும் முன் என்ன வகையான பால், இனிப்பு சேர்த்து அருந்துகிறோமா இல்லையா? எவ்வளவு அருந்துகிறோம் என்பதில் நிச்சயம் கவனம் செலுத்தியாக வேண்டும்.
ஏனெனில் இதிலுள்ள லாக்டோஸ் சர்க்கரையாக மாறும் பட்சத்தில் உடலிலும் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடலாம், எனினும் மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை காட்டிலும் பால் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடாது என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக எந்தவித உடற்பயிற்சிகளும் இல்லாமல் பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை எடுத்துக்கொள்வதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
காலை உணவாக அல்லது காலை உணவுடன் சேர்த்து பாலை அருந்தலாம், இது அன்றைய நாளுக்கான எனர்ஜியை தருவதுடன் சர்க்கரையின் அளவையும் சீராக வைக்கும்.
கொழுப்பு சத்து குறைந்த பாலை தேர்ந்தெடுத்து அருந்துவது சிறந்தது. டைப் 1 சர்க்கரை நோயாளியாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி பாலை எடுத்துக் கொள்ளவும்.
இனிப்பு சேர்க்கப்பட்ட பால், கொழுப்பு அதிகம் நிறைந்த பாலை தவிர்ப்பது நல்லது. பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களில் அலர்ஜி இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளவும்.