விடுமுறையை பயன்படுத்தி ரூ.32 கோடி மதிப்புள்ள வைரங்கள் திருட்டு
தொடர் விடுமுறையை பயன்படுத்தி ரூ.32 கோடி மதிப்புள்ள வைரங்கள் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
வைரங்கள் திருட்டு
இந்திய மாநிலமான குஜராத், சூரத்தில் உள்ள கபோத்ரா பகுதியில் இருக்கும் ஒரு வைரக் கடையில் இருந்து, 32 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் திருடப்பட்டுள்ளன.
கடையில் உள்ள ஒரு இரும்புப் பெட்டகத்தை வெட்டி இந்த கொள்ளை சம்பவத்தை திருடர்கள் நடத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 முதல் 17 வரையில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் ஜன்மாஷ்டமி பண்டிகைக்காகவும், நீட்டிக்கப்பட்ட வார இறுதிக்காகவும் கடைகளை மூடி இருந்தனர்.
அப்போது தான் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். மேலும், அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிவிஆரையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.
கடையின் உரிமையாளர் தேவேந்திர சவுத்ரியின் மேலாளர் ஹனுமான் ஆகஸ்ட் 15 ஆம் திகதி அன்று மதியம் யூனிட்டைப் பூட்டிவிட்டார். அதன் பிறகு கடை மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து 18-ம் திகதி காலை பக்கத்து யூனிட் உரிமையாளர் ஒருவர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக சவுத்ரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்பு, தேவேந்திர சவுத்ரி வந்து பார்த்ததில் தொழிற்கூடத்தில் இருந்த ரூ.32.48 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்படாத வைர கற்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக சூரத் பொலிசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |