அண்டை நாட்டின் பெருவெள்ளத்திற்கு இந்தியா காரணமா? தூதர் ஒருவர் கடும் குற்றச்சாட்டு
தொடர் பருவமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் பாகிஸ்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தை ஏற்படுத்தியது
முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் மரணமடைந்துள்ளதுடன், நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படுவது ஒரு பொதுவான நிகழ்வாக இருந்தாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கம் தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளது என்றும்,
அண்டை நாட்டில் வேண்டுமென்றே வெள்ளத்தை ஏற்படுத்தியது என்றும் முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அப்துல் பாசித், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதன் மூலம் இந்தியா தண்ணீரை ஆயுதமாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் பெருவெள்ளம் போன்ற நெருக்கடியை உருவாக்க இந்தியா வேண்டுமென்றே சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை அதிக அளவில் வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியா வேண்டுமென்றே தண்ணீரை சேமித்து வைத்து அதிக அளவில் வெளியேற்றியாதாகத் தெரிகிறது என குறிப்பிட்டுள்ள அவர், தண்ணீரை ஆயுதமயமாக்குவதும், ஆக்கிரமிப்புக்கான கருவியாகப் பயன்படுத்துவதும் கண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
மட்டுமின்றி, இந்த நெருக்கடியைச் சமாளிக்க சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா பாகிஸ்தானுடன் ஒத்துழைத்திருந்தால், பேரழிவின் அளவைக் குறைத்திருக்கலாம் என்றும் அப்துல் பாசித் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தாவி மற்றும் சட்லஜ்
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது, இரு நாடுகளிலும் பாயும் ஆறுகள் பற்றிய வெள்ளம் தொடர்பான தகவல்களை ஏற்கனவே அதன் உயர் ஸ்தானிகராலயம் மூலம் அனுப்பியதாகக் கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான், சிந்து நதி நீர் ஒப்பந்த வழிகள் வழியாக இந்தத் தகவல் அனுப்பப்படவில்லை என்றும், இதனால் வரவிருக்கும் வெள்ளத்தின் சரியான நேரம் மற்றும் தீவிரத்தை மதிப்பிடுவது கடினமாக இருந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியிட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பருவமழைக்காக தாவி மற்றும் சட்லஜ் நதிகளுக்கு இந்தியா வெள்ள எச்சரிக்கைகளை விடுத்திருந்தது, ஆனால் அந்தத் தகவல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் அனுப்பப்பட்டது.
மட்டுமின்றி, பெருவெள்ளம் ஏற்படும் என்பதுடன், அதன் விரிவான விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் பின்னணியில், திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |