சுவிட்சர்லாந்தில் கிளைடர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த பொலிசார்... விமானம் ஒன்றும் விழுந்து கிடந்ததால் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில், கடந்த சனிக்கிழமையன்று கிளைடர் ஒன்று விபத்துக்குள்ளானதாக கிடைத்த தகவலின்பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள். இதற்கிடையில், தெரியவந்த தகவல் என்னவென்றால், Thurgau மாகாணத்திலிருந்து ஒரு பைலட்டுடன் கிளைடர் ஒன்று புறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Robin DR400 என்னும் சிறிய ரக விமானம் ஒன்றும் Neuchâtel மாகாணத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
அதில் ஒரு பைலட்டும், ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூன்று பயணிகளும் பயணித்துள்ளார்கள். காலை 9.30 மணியளவில், ஒரு கிளைடர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், பைலட் இறந்துபோனதாகவும் பொலிசாருக்கு அவசர உதவிக்குழுவினர் தகவல் கொடுத்துள்ளார்கள்.
அந்த இடம் எளிதில் சென்றடைய முடியாத இடம் என்பதால், பொலிசாரும் மீட்புக்குழுவினரும் ஒரு வழியாக மறுநாள் சம்பவ இடத்தை அடைந்தபோது, கிளைடர் விழுந்து கிடந்ததற்கு சற்று தொலைவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது தெரியவந்துள்ளது. அதிலிருந்த, பைலட் மற்றும் பயணிகள் ஆக நான்குபேரும் உயிரிழந்து கிடந்துள்ளார்கள்.
ஆக மொத்தத்தில், கிளைடரின் பைலட், விமானத்தின் பைலட், பயணிகள் என ஐந்து பேர் உயிரிழந்தது தெரியவந்ததையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை என்னவென்றால், இரண்டு விபத்துக்களுக்கும் தொடர்பு உள்ளதா, அதாவது கிளைடரும் விமானமும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்துக்கள் நேர்ந்ததா, அல்லது இரண்டும் தனித்தனி விபத்துக்களா என்பது தெரியவில்லை.
ஆகவே, இந்த இரண்டு விபத்துக்களுக்கு காரணம் என்ன, மற்றும் அவை இரண்டுக்கும் தொடர்பு உள்ளாதா என்பது குறித்து அறிவதற்காக, Graubünden மாகாண அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.