சவுதி அரேபியா பேச்சுவார்த்தை கடினமாக இருக்கும்: உக்ரைன் விவகாரத்தில் இழுத்தடிக்கும் ரஷ்யா
உக்ரைன் போர் தொடர்பில் பேச்சுவார்த்தை மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிக்கலான பேரப்பேச்சு இன்னும் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
தொடக்க கட்டத்தில்
ரஷ்யாவின் இந்த கருத்து உக்ரைன் போருக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளை குறைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் அடுத்த 48 மணி நேரத்தில் சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிகாரிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சண்டையை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
தற்காலிக போர் நிறுத்தங்களுக்கு இரு தரப்பினரும் வெவ்வேறு திட்டங்களை முன்மொழிந்த போதிலும், தாக்குதல்கள் குறையாமல் தொடர்வதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் தொடக்க கட்டத்தில் இருப்பதாகவே ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சாத்தியமான போர்நிறுத்தம் எவ்வாறு செயல்படுத்தப்படலாம் என்பது குறித்து பல தீர்க்கமான கேள்விகள் மற்றும் கருத்தியல் வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முழுமையாகவும் உடனடியாகவும் 30 நாள் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்கா - உக்ரைன் கூட்டு அழைப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளார்.
மீண்டும் தொடங்க வேண்டும்
ஆனால் மின் அமைப்புகள் மீதான தாக்குதல்களை தற்போது கைவிடுவதாக புடின் உறுதி அளித்துள்ளார். சவுதி அரேபியா பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் முதன்மையான கவனம் என்பவது கருங்கடல் தானிய ஏற்றுமதி தொடர்பில் இருக்கும் என்றே Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே தங்களின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உக்ரைனுடன் கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் விவாதிக்கவும் ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
2022ல் துருக்கி மற்றும் ஐ.நா முன்னெடுத்த இந்த தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து 2023ல் ரஷ்யா வெளியேறியது.
ரஷ்யாவின் வேளாண் பொருட்கள் மற்றும் உரங்களின் சொந்த ஏற்றுமதி மீதான தடைகளைத் தளர்த்துவதற்கான அதன் உறுதிமொழிகளை மேற்கத்திய நாடுகள் நிலைநிறுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |