புதைத்த சடலங்களை தோண்டி எடுத்து தகனம் செய்யும் ரஷ்ய ராணுவம்: பகீர் காரணம்
உக்ரைனின் மரியுபோலில் கொன்று தள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் சடலங்களை தோண்டி எடுத்து ரஷ்யா எரியூட்டுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
புச்சா மற்றும் கீவ் நகரங்களில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின்வாங்கிய பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அட்டூழியங்கள் போன்று மரியுபோல் பகுதியிலும் அம்பலப்படாமல் இருக்க ஆதாரங்களை அழிக்கும் ஒரு சாத்தியமான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
மரியுபோல் நகர சபை இன்று டெலிகிராம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்ய துருப்புகள் சடலங்களை தோண்டி எடுப்பதாகவும், கண்காணிக்க ஆட்களை நியமித்துள்ளதாகவும், உள்ளூர் மக்கள் தங்கள் இறந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை மீண்டும் புதைப்பதை தடுத்து நிறுத்தவும் முயன்று வருவதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், ரஷ்ய துருப்புகள் நடமாடும் தகன மேடையுடன் மரியுபோல் நகரில் வலம் வருவதாகவும், இது உண்மையில் ஆபத்தான முன் உதாரணம் எனவும் நகர சபை நிர்வாகிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்ய துருப்புகள் துறைமுக நகரமான மரியுபோலை முற்றுகையிட்ட பின்னர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், உணவு, தண்ணீர், மின்சாரம் இன்றி சுமார் 100,000 மக்கள் சிக்கியிருப்பதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புகள் மரியுபோல் நகரில் இருந்து பின் வாங்கியுள்ள நிலையில் தற்போது செச்சென் கூலிப்படைகள் களமிறங்கியுள்ளதாகவும், கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் மரியுபோல் நகரில் 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 20,000 தாண்டலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, மரியுபோல் நகரம் இக்கட்டான சூழலில் உள்ளதாகவும் தொடர்ந்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மரியுபோல் நகரம் இதுவரை ரஷ்ய துருப்புகள் வசம் சிக்கவில்லை என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.