சிறந்த நடத்தையுடன் இருப்பார்கள்... டிஜிட்டல் அடையாள அட்டையை ஆதரிக்கும் உலகின் பெரும் கோடீஸ்வரர்
உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான Larry Ellison பிரித்தானியாவின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை ஆதரித்துள்ளார்.
சிறந்த நடத்தை
குறித்த திட்டம் அமுலுக்கு வந்ததன் பின்னர், பிரித்தானியர்கள் சிறந்த நடத்தையுடன் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, நாட்டில் நடப்பதை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கவும் வசதியாக அமையும் என்றார்.
குடியேற்றத்தை சமாளிக்க புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிட்டல் அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம், பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு வயது வந்தவரும் நாட்டில் தங்கள் நிலையை நிரூபிக்க டிஜிட்டல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
இருப்பினும், இந்தத் திட்டமானது நம்பமுடியாத அளவிற்கு விவாதத்தைத் தூண்டியுள்ளதுடன், அடையாள அட்டையைக் கைவிடக் கோரும் மனுவில் 2 மில்லியன் மக்கள் கையொப்பமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஆனால் அரசாங்கம் குறித்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், குறித்த திட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ள Larry Ellison, மக்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் கண்காணிக்கப்படுவதன் மூலம் விதிகள் பின்பற்றப்பட முடியும்,
மேலும் மக்கள் தங்கள் சொந்த நடத்தையை ஒழுங்குபடுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றார். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால, மக்கள் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைக்கு வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Larry Ellison அழுத்தம்
எலிசன் மிகவும் சக்திவாய்ந்த நபர், இந்த மாத தொடக்கத்தில் எலோன் மஸ்க்கை முந்தி உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார். தற்போது, அவர் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
இந்த நிலையில், ஸ்டார்மர் அரசாங்கம் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என தமது செல்வாக்கை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு Larry Ellison அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இதனால் அவரது நிறுவனம் மில்லியன் கணக்கான பவுண்டுகளை சம்பாதிக்கும் என்பது அவரது திட்டம். மட்டுமின்றி, ஆரக்கிள் நிறுவனத்தின் ஆக்ஸ்போர்டை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மையம் ஒன்பது மாத காலப்பகுதியில் குறைந்தது 29 முறை அமைச்சர்களைச் சந்தித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |