அதிமுக கோட்டையில் போட்டியிடும் தினகரன்! ராஜதந்திர ஆட்டம் ஆரம்பம்: மும்பரமாக நடக்கும் தேர்தல் பணிகள்
தமிழகத்தில் அதிமுகவின் கோட்டையான ஆண்டிப்பட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்பு தினகரனின் ஒவ்வொரு நகர்வும் அதிரடியாகவே உள்ளது என்று கூறலாம்.
இந்நிலையில், தற்போது வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தினகரன் அதிமுகவின் கோட்டையில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.
அதாவது ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ளார், அங்கு அமுமுகவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனராம்.
சட்டசபை தேர்தலுக்குள் அமமுக- அதிமுக இணையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால், தினகரன், ஆர்.கே. நகர் மற்றும் தேனிமாவட்ட தொகுதி ஒன்றில் போட்டியிடப் போவதாக கூறியிருந்தார்.
தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஆண்டிபட்டி தொகுதிதான் அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. இந்த தொகுதியில் 9 முறை அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.
1980-ல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், 1984-ல் எம்ஜிஆர், 2002, 2006-ல் ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி இது.
இந்த தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக வேட்பாளராக 3 முறை களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார். தினகரனோடு இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இப்போது திமுகவில் இருக்கிறார்.
இருப்பினும், அதிமுக வாக்கு வங்கி அங்கு வலிமையாக இருப்பதாக கூறப்படுவதன் காரணமாகவே, தினகரன் இந்த தொகுதியை தெரிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அதிமுக தலைமைக்கு தமது வலிமையை காட்டலாம் என்பதும் தினகரனின் கணக்கு என்று அவரின் நெருங்கிய உறவுகள் கூறுகின்றனர்.

