சசிகலா வந்த போது கார் தந்து உதவிய நபருக்கு விஸ்வாசத்தை காட்டிய தினகரன்! என்ன செய்துள்ளார் பாருங்க
தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு கார் தந்து உதவிய அதிமுக-வின் தட்சிணாமூர்த்திக்கு தினகரன் தன்னுடைய விஸ்வாசத்தை காட்டியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, கடந்த ஜனவரி மாதம் விடுதலையாகி, தமிழகம் திரும்பினார்.
அப்போது அவர் தமிழக எல்லைக்குள் நுழைந்த போது, அதிமுக-வை சேர்ந்த தட்சிணாமூர்த்தி காரில் ஏறி கொண்டார்.
அதில் அதிமுக-வின் கொடி இருந்தது. அதிமுக கொடியுடன் அவர் வந்ததால், அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அதே தட்சிணாமூர்த்திக்கு அமமுகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில், அவர் சசிகலாவுக்கு கார் கொடுத்ததன் காரணமாக மட்டும், சீட் கொடுக்கப்படவில்லையாம், கட்சியில் வாரிசுகளுக்கு பதவி தருகிறார் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மாதவரம் மூர்த்தி மீது, தட்சிணாமூர்த்தி ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தாராம்.
மேலும் செம்மரக்கடத்தல் புள்ளிகளாக ஆளுங்கட்சி புள்ளிகள் மாறி வருகிறார்கள் என்று தைரியமாக பேசியதுடன், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த கடுப்பில் தான் அவர் சசிகலாவை வரவேற்க கார் எடுத்துக் கொண்டு, பெங்களூருக்கு சென்றுள்ளார்.
கர்நாடக எல்லையான ஜூஜூவாடிக்கு அருகே வந்த போதுதான், தட்சிணாமூர்த்தியின் காருக்கு சசிகலா மாறியிருக்கிறார்.
தட்சிணாமூர்த்தியை கட்சியை விட்டு தூக்கியதுமே, கண்டிப்பாக அமமுகவில் இணைவார் என்று உறுதியாக சொல்லப்பட்டது. இப்போது அமமுக மாதவரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது.

