அடுத்தடுத்து வெளியேறிய இலங்கை வீரர்கள்.. தனியாளாய் பாகிஸ்தானை மிரட்டிய தினேஷ் சண்டிமல்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஷ் சண்டிமல் அரைசதம் விளாசி மிரட்டினார்.
இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியுள்ளது.
இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கருணரத்னே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய குஷால் மெண்டிஸ் 21 ஓட்டங்களில் அவுட் ஆக, மற்றோரு தொடக்க வீரர் ஒஷாட பெர்னாண்டோ 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால், இலங்கை அணி தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் சண்டிமல் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய சண்டிமல் அரைசதம் அடித்தார். அதன் பின்னர் பவுண்டரிகள் விளாசிய அவர் 115 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
cricketnmore
இதில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும். அவரது விக்கெட் இழப்பிற்கு பின்னர் இலங்கை அணி 200 ஓட்டங்களை எட்டுமா என்ற கேள்வி எழுந்தது. யாரும் எதிர்பார்க்காத விதமாக கடைசி விக்கெட்டிற்கு களமிறங்கிய மஹீஸ் தீக்ஷணா நிலைத்து நின்று ஆடினார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அவரது விக்கெட்டை கைப்பற்ற போராடினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீக்ஷணா 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா இருவரும் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
PC: Twitter (@TheRealPCB)
PC: Twitter (@TheRealPCB)