பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போல தான் கிரிக்கெட் பேட்கள்! மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக்
கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பேசி அசத்தி வந்த வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இப்போது அதே வர்ணனையால் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.
தினேஷ் கார்த்திக், சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வர்ணனையாளராக பணிபுரிந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் அணி போட்டிக்கும், இப்போது இலங்கை தொடருக்கும் வர்ணனை செய்து வருகிறார். அவரது கமெண்ட்ரி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை இடையே நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்த போது அவர் கூறிய கருத்து கடும் சர்ச்சையாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர்களின் பேட் குறித்து அவர் பேசுகையில் எந்த பேட்ஸ்மெனுக்கும் தங்கள் வைத்திருக்கும் பேட்களை விட, அடுத்த வீரர் வைத்திருக்கும் பேட்களைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள்.
பேட்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போல.. நம்மிடம் இருப்பதை விட அடுத்தவரிடம் இருப்பது தான் சிறப்பாக தெரியும். அது போன்று, தம்மிடம் உள்ள பேட்களை விட, அடுத்தவர்களிடம் உள்ள பேட்களைத் தான் பேட்ஸ்மேன்கள் விரும்புவார்கள் என்று பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் பலரும் அதிருப்தியுடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.
ஒரு பெண்ணின் பதிவில், உங்கள் வர்ணனை பிடிக்கும். ஆனால், அடுத்த வீட்டுக்கார்களின் மனைவியை எடுத்துக்காட்டாக கூறியதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், தினேஷ் கார்த்திக் பக்கத்து வீட்டுக்காரரை நினைத்தால் பரிதாபமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையாகி இருக்கும் நிலையில், பிசிசிஐ விரைவில் இதுகுறித்து விளக்கம் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.