அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த கனேடிய பெண்: அரசின் அதிரடி நடவடிக்கை
கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயம் தொடர்பில், அவுஸ்திரேலிய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளது.
சுயநினைவின்றிக் கிடந்த கனேடிய இளம்பெண்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் அவுஸ்திரேலியாவின் K’gari என்னுமிடத்திலுள்ள கடற்கரை ஒன்றில் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்டார்.
பொலிசாருடன் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்த நிலையிலும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை, சிறிது நேரத்திற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

அவர் விழுந்து கிடந்த இடத்தில், அவரைச் சுற்றி dingoes என அழைக்கப்படும் காட்டு நாய்கள் நின்றதால், அவர் அந்த நாய்களால் கொல்லப்பட்டாரா என கேள்வி எழுந்தது.
உடற்கூறு ஆய்வில், அவரது உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன்பும், அவர் உயிரிழந்த பின்பும் காயங்கள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
என்றாலும், காட்டு நாய்கள் அவரைத் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
அரசின் அதிரடி நடவடிக்கை
இந்நிலையில், பைப்பர் கடற்கரையில் விழுந்து கிடந்தபோது அவரை காட்டுநாய்கள் சூழ்ந்து நின்ற விடயமும், அவை அவரை கடித்துக் காயப்படுத்திய விடயமும், அவுஸ்திரேலிய மக்களையும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
ஆகவே, அந்தக் காட்டு நாய்களைக் கொல்ல அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
அந்தக் காட்டு நாய்கள் கருணைக்கொலை செய்யப்படும் என அவுஸ்திரேலிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், இதற்கு முன்பும் இந்த காட்டு நாய்களால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு ஒன்பது வயது பிள்ளை ஒன்றை இந்த காட்டு நாய்கள் குதறிக் கொன்றன.
அத்துடன், 1980ஆம் ஆண்டு, நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கர விடயம் நடைபெற்றது. Azaria Chamberlain என்னும் இரண்டு வயதுக் குழந்தையை இந்த காட்டு நாய்கள் தாக்கிக் கொன்றுவிட்டன.
அந்த சம்பவத்தை மையமாக வைத்து, ‘A Cry in the Dark’ என்னும் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |