விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது.., ஆதவ் அர்ஜுனாவை சாடிய இயக்குநர் அமீர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகிய நிலையில் இயக்குநர் அமீர் விமர்சனம் செய்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா விலகல்
சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 6 -ம் திகதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகியுள்ளார்" என்றார்.
இதையடுத்து, கட்சியில் இருந்து ஆறு மாதத்திற்கு ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார்.
இதன் பின்னர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஆதவ் அர்ஜுனா, "விஜய் பங்கேற்ற புத்தக விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது" என்றார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக தொல்.திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜூனா கடிதம் எழுதியுள்ளார்.
அமீர் விமர்சனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகிய நிலையில் இயக்குநர் அமீர் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் தனது பதிவில், "தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமாவின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
அதனால் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |