அவுஸ்திரேலியாவிடம் பெருந்தொகை இழப்பீடு கேட்கும் நோவக் ஜோகோவிச்
அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிராக டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்குவதற்கும் முந்தைய நாள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தை முன்வைத்து நோவக் ஜோகோவிச் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
அவரது விசா ரத்து செய்யப்பட்டது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் 11 நாட்கள் நீண்ட போராட்டங்களுக்கு முடிவிலேயே நோவக் ஜோகோவிச் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் தமது சொந்த நாடான செர்பியாவுக்கு திரும்பியுள்ள நோவக் ஜோகோவிச், தம்மை முறையாக நடத்தவில்லை என குற்றஞ்சாட்டி அவுஸ்திரேலியா அரசு மீது 6 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய அரசுடன் நோவக் ஜோகோவிச் முன்னெடுத்த சட்ட போராட்டங்களுக்கான தொகையை அவுஸ்திரேலிய டென்னிஸ் சங்கம் அளிக்க மறுத்த நிலையிலேயே, தற்போது இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாக அவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் நிலை வீரரை அவுஸ்திரேலிய அரசு அவமானப்படுத்தியதாகவும், அவரிடம் முறையாக நடந்துகொள்ளவில்லை எனவும் சட்டத்தரணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டென்னிஸ் அவுஸ்திரேலியா சங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், சட்டப்போராட்டத்திற்கு நோவக் ஜோகோவிச் சார்பில் செலவான தொகை முழுவதும் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அவுஸ்திரேலியாவில் இருந்து நோவக் ஜோகோவிச் வெளியேற்ரப்படும் வரையிலான அனைத்து செலவுகளையும் டென்னிஸ் அவுஸ்திரேலியா அமைப்பே ஏற்றுக்கொண்டதாகவும் விளக்கமளித்துள்ளது.