புரட்சிக்கலைஞர் முதல் எதிர்கட்சி தலைவர் வரை: கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை
புரட்சிக்கலைஞராக 1980 ஆண்டுகளில் வலம் வந்த நடிகர் விஜயகாந்த், தன்னுடைய 71 வது வயதில் தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு நிரந்தர துயிலில் மூழ்கியுள்ளார்.
விஜயகாந்த் காலமானார்
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் இன்று காலை அறிக்கை வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் கடந்து வந்த பாதை
தமிழ் திரையுலகில் இருந்து தமிழக அரசியலுக்குள் வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, அரசியலில் தனக்கென தனி கால் தடத்தை பதித்த ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே.
தமிழ்நாட்டு அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த்.
தமிழக மக்களால் தர்மதுரை, கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன், புரட்சிக் கலைஞர் என பெரிதும் போற்றப்பட்டவர் விஜயகாந்த்.
வாழ்க்கை பயணம்
1952ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தவர். சினிமா மீது ஏற்பட்ட தீராத காதல் அவரை சென்னைக்கு வரவழைத்தது, படவாய்ப்பிற்காக அவர் ஏறி இறங்காத இடம் என்பதே இல்லை.
ஆரம்ப கட்டத்தில் தன்னுடைய நிறத்தால் ஒதுக்கப்பட்டவர். தன்னுடைய அத்தனை அவமானங்களையும், நிராகரிப்பையும் தகர்த்தெறிந்து சினிமாவில் தன்னுடைய கால் தடத்தை பதித்தார்.
ஆரம்ப காலங்களில் அவரது படங்கள் சரியாக ஓடாத நிலையில், தூரத்து இடி முழக்கம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து தான் விஜயராஜ் என்ற தனது பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார்.
தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் மூலம் பெரும் லாபத்தை தமிழ் திரையுலகினருக்கு விஜயகாந்த் பெற்றுக் கொடுத்தார். திரைப்படங்களிலும் சரி, பொது வாழ்விலும் சரி பல்வேறு சீர்திருத்தங்கள் பேசினார், அதனை நடைமுறையும் செய்து காட்டினார் விஜயகாந்த்.
படத்தின் நாயகன் என்ன சாப்பிடுகிறாரோ, அதை தான் படத்தில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்வரை சாப்பிட வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர். 10 ஆண்டுகளில் மட்டும் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஒரே வருடத்தில் விஜயகாந்த் 18 படங்களில் நடித்து அசத்தினார் விஜயகாந்த். தற்போது தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக உள்ள தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் நடிகர் விஜயகாந்த்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
தமிழகத்தில் பேரிடர் என்று வந்துவிட்டால் நிதிகளை வாரி வழங்கியவர் விஜயகாந்த். மேடையில் ஏறும் போது எல்லாம் சத்யராஜ் கூறுவது, “சினிமாவில் அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.. அதனை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவர் விஜயகாந்த்” என்று தான்.
1980களில் புரட்சிக்கலைஞராக வலம் வந்த விஜயகாந்த், 90களில் கேப்டனாக மாறினார்.
தன்னுடைய 100வது திரைப்படமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படம் 200 நாட்களை கடந்து ஓடியது.
அரசியல் வாழ்க்கை
விஜயகாந்த் அவர்களின் அரசியல் தொடக்கம் என்றால் 1979ல் உருவாக்கப்பட்ட தென்னிந்திய விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் தான். ஒவ்வொரு ரசிகர் மன்ற மேடையிலும்…‘தமிழன் என்று சொல்லடா.. தலைநிமிர்ந்து நில்லடா’ என்று முழங்கியது’.
தன்னுடைய ரசிகர் மன்றம் மூலமாக இலவச வேட்டி சேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள், தையல் மெஷின்கள், மாணவர்களுக்கு கணினி பயிற்சிகள், இலவச திருமணங்கள் பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கினார்.
1999ல் நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது நடிகர் சங்கத்திற்கு இருந்த கடனை பெரும் பெறுப்பேற்று அதனை அடைத்தார்.
கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகள் இருந்த போதே துணிச்சலாக அரசியலில் இறங்கி தனக்கென தனி இடம் பிடித்தார். 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த்.
இதன் பின் அவருக்கு ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாக அவரது கட்சி பணிகள் தொய்வு அடைந்து இருந்தாலும், விஜயகாந்த் என்ற அந்த ஒற்றை மனிதருக்காக இன்றளவும் தேமுதிகவுக்கு பலர் ஆதரவாக நிற்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Vijayakanth, DMDK, Tamil Nadu, Actor Vijay, Thalapathy Vijay,