'ப்ளீஸ் மோடி ஜி' பிரதமரை பிரச்சாரத்துக்கு அழைத்த தி.மு.க வேட்பாளர்கள்! கோபத்தில் பா.ஜ.க.வினர்
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ள நிலையில், அவரை தங்களின் தொகுதிக்கு வந்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பிரதாரம் செய்யுமாறு திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் ட்விட்டரில் அழைப்புவிடுத்து வருகின்றனர்.
இந்த ட்வீட்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரிடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு கோவை தொண்டாமூத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக வந்து பரப்புரை செய்யுமாறு ட்விட்டரில் அழைப்புவிடுத்தார்.
இந்நிலையில், பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் இ. கருணாநிதி, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர். ராஜா, திருச்சியில் போட்டியிடும் இனிக்கோ இருதயராஜ், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் செங்குட்டுவன், பர்கூர் தொகுதியில் போட்டியிடும் மதியழகன், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் ஆர்.காந்தி மேலும் பல்வேறு திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து தங்களின் தொகுதிக்கு வந்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.
தாங்கள் எங்கள் தொகுயில் பிரச்சாரம் செய்தால் தங்களின் வெற்றிக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க வேட்பாளர்கள் மோடியை தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அழைத்து வருவது பா.ஜ.க தொண்டர்களை கோபமடையச் செய்துள்ளது.


