அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கிடைக்கவிருக்கும் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா?
உலக நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதப்படுபவர் அமெரிக்க ஜனாதிபதி. ஜனாதிபதி பொறுப்பில் வருபவர்களுக்கு அமெரிக்க நிர்வாகம் அதிக ஊதியம் மற்றும் பிற சலுகைகளையும் அளித்து வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஆண்டுக்கு 400,000 டொலர் ஊதியமாக பெற உள்ளார்.
அத்துடன், கூடுதல் செலவுகளுக்கான சலுகையாக ஆண்டுக்கு 50,000 டொலர் தொகையை பெறுகிறார்.
மட்டுமின்றி பயணச் செலவுகளுக்காக 100,000 டொலர் தொகையை பெறுகிறார். இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பு வகிப்பவர் அரசு மற்றும் இராணுவ வாகனம் மற்றும் விமானங்களிலேயே பயணம் மேற்கொள்வார்.
அத்துடன், பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவுகளுக்காக ஆண்டுக்கு 19,000 டொலர் தொகை அளிக்கப்படுகிறது.
ஜோ பைடனை பொறுத்தமட்டில் மிகவும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர். 1972-ல் தமது 29 வது வயதில் முதன் முறையாக செனட்டுக்கு தெரிவான ஜோ பைடன், ஆண்டுக்கு 42,500 டொலர் தொகையை ஊதியமாக பெற்றுள்ளார்.
2009-ல் அந்த பதவியில் இருந்து அவர் விடுபடும் போது அவரது ஊதியம் ஆண்டுக்கு 169,300 டொலர் என அதிகரித்திருந்தது.
அதன் பின்னர் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆண்டுக்கு 230,700 டொலர் ஊதியமாக பெற்றுள்ளார்.
இது மட்டுமின்றி, புத்தகங்கள் எழுதியுள்ள ஜோ பைடன், 2008-ல் தமது முதல் நினைவுக் குறிப்பு புத்தகத்திற்கு ராயல்டியாக 71,000 டொலர் தொகையை பெற்றுள்ளார்.
2017 முதல் 2019 வரையான காலகட்டத்தில் ஜோ பைடன் சுமார் 15 மில்லியன் டொலர் தொகையை வருவாயாக ஈட்டியுள்ளார்.
இதில் 8 மில்லியன் டொலர் தொகையானது அவரது புத்தகங்களுக்கான ஒப்பந்தம் மூலம் கிட்டியுள்ளது. .
2.4 மில்லியன் டொலர் அளவுக்கு கருத்தரங்குகளில் பேசியதால் வருவாய் ஈட்டியுள்ளார் ஜோ பைடன்.