ரயில்வே ஸ்டேஷனில் நீங்களும் உணவு கடை திறக்க வேண்டுமா? அதற்கான தகவல் உள்ளே
ரயில் நிலையங்களில் எப்படி உணவு கடைகளை திறக்கலாம் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய இரயில்வே
இந்திய ரயில்வே நேரடியாக 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல் மறைமுகமாகவும் தொழில் மற்றும் வாய்ப்புகளை வழங்குகிறது. அதாவது , ரயில் நிலையங்களில் உணவுக் கடைகள் திறக்கும் ஒப்பந்தம் மூலம் வணிகம் செய்வதற்கு இந்திய ரயில்வே ஏற்பாடுகள் செய்கிறது.
இதனால், பலருக்கு வேலை கிடைக்கிறது. இந்தியாவில் மொத்தம் தினமும் 2.5 கோடிக்கும் மேல் பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்த ரயில்களானது மொத்தம் சுமார் 7325 நிலையங்கள் வழியாக செல்கிறது.
இதனால், ரயில்வே பிளாட்பாரத்தில் உள்ள டீ மற்றும் ஸ்நாக்ஸ் கடைகளுக்கு பயணிகள் அதிகம் வருகின்றனர். அங்கு, விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானத்தை பெறலாம்.
டெண்டர்
ரயில்வே பிளாட்பாரங்கள் மற்றும் ரயில்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும் என்பதால் உள்ளூரில் உள்ள கடைக்காரர் முதல் இளம் தொழில் முனைவோர் வரை இங்கு உணவுக்கடை திறக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
ஆனால், அவர்களுக்கு இதைப்பற்றிய போதிய தகவல்கள் தெரியாததால் அதை கைவிடுகின்றனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உணவுக் கடை டெண்டருக்கு நாம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதாவது, ரயில்களில் கேட்டரிங் திறப்பது, ரயில் பயணிகளின் தேவைக்காக ரயில்வே ஸ்டேஷனில் உணவுக் கடை அல்லது வேறு ஏதேனும் கடை திறப்பது குறித்த டெண்டரை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரில் நாம் விண்ணப்பித்து கடை அமைப்பதற்கான உரிமத்தை பெறலாம்.
மேலும், கடையின் வகையை பொறுத்து ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டால்களின் விலை வேறுபடும். அதுமட்டுமல்லாமல், கடையின் அளவு மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப ரயில்வே கட்டணம் வசூலிக்கப்படும்.
புத்தக கடை, தேநீர் கடை, உணவு கடை ஆகியவை அமைப்பதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இருந்தாலும், நகரம் மற்றும் அங்கு அமைந்துள்ள நிலையத்தைப் பொறுத்து தான் மாறுபடும்.
IRCTC
இந்திய ரயில்வேயில் உணவு தொடர்பான அனைத்தையும் IRCTC இயக்குகிறது. அதாவது உணவின் விலை முதல் வணிகம், மெனு ஆகியவற்றை கூட IRCTC தீர்மானிக்கிறது.
தற்போது, ஜனஹர் கேந்திரா, ஃபுட் பிளாசா, ஃபுட் கோர்ட், ஃபாஸ்ட் ஃபுட் யூனிட், இ-கேட்டரிங் ஆகியவற்றில் IRCTC தான் செயல்படுகிறது. ரயில் நிலையத்தில் புத்தக கடை, தேநீர் கடை, உணவு கடை அல்லது வேறு ஏதேனும் கடை அமைப்பதற்கு கடைக்காரர் ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
இந்திய ரயில்வே தளங்களில் உள்ள டெண்டர் பிரிவைப் பார்வையிடுவதன் மூலம் நாம் கடை திறப்பது மற்றும் கட்டணம் உள்ளிட்ட தகவலை பெற முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |