அதற்காக கொரோனா நோயாளிகளை கொன்றேனா? மறுப்பு தெரிவித்த மருத்துவர்
இத்தாலியில் கொரோனா உச்சத்தில் இருந்த நாட்களில், மருத்துவமனையில் நெருக்கடியை குறைக்க கொரோனா நோயாளிகளை கொன்றதாக கூறிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் ப்ரெசியா பகுதி அருகே அமைந்துள்ள மோன்டிச்சியரி மருத்துவமனையிலேயெ குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மருத்துவமனையில் பணியாற்றிய 47 வயதான மருத்துவர் கார்லோ மோஸ்கா, 61 வயதான நடேல் பாஸ்ஸி மற்றும் 80 வயதான ஏஞ்சலோ பாலெட்டி ஆகியோருக்கு சக்தி வாய்ந்த மயக்க மருந்துகளை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இத்தாலியில் கொரோனா பரவல் உச்சம் கண்ட கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே குறித்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா நோயாளிகள் பலர், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் திண்ணைகளில் வரிசையாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மருத்துவர் மோஸ்கா விவகாரத்தில் மேலும் மூன்று இறப்புகள் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது வீட்டுச்சிறையில் உள்ள மருத்துவர் மோஸ்கா, தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளதுடன், ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார்.
மோஸ்கா பணியாற்றிய மருத்துவமனையின் செவிலியர்கள் சிலரே சந்தேகத்தின் அடிப்படையில் பகிர்ந்த குறுந்தகவலை அடுத்தே மருத்துவர் மோஸ்கா தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு மூச்சுக்குழாயில் குழாய் செலுத்தும் பொருட்டு மோஸ்கா வீரியம் மிக்க இருவேறு மயக்க மருந்துகளை அளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் அந்த நோயாளிகளுக்கு குழாய் பயன்படுத்தப்படவில்லை, இதனால் மருத்துவர் மோஸ்கா வீரியம் மிக்க மயக்க மருந்துகளை பயன்படுத்தியதன் நோக்கம் வேறு என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், நவம்பர் 2019 முதல் 2020 ஏப்ரல் வரை இந்த மருந்துகளின் ஆர்டர்களில் 70% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவமனை நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
ஆனால் வெறும் 5 நோயாளிகளுக்கு மட்டுமே குழாய் பொருத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இந்த விவகாரத்தை மூடி மறைக்க மருத்துவர் மோஸ்கா செவிலியர்களை பணித்ததாகவும் புகார் எழுந்தது.
