கொரோனா தடுப்பு மருந்தை திருடி குடும்பத்தினருக்கு அளித்த ஆசிய வம்சாவளி மருத்துவர்: அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை
அமெரிக்காவில் 9 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை திருடி, தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அளித்த ஆசிய வம்சாவளி மருத்துவர் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் மையத்தில் இருந்தே ஆசிய வம்சாவளி மருத்துவரான ஹசன் கோகல் 9 டோஸ் தடுப்பு மருந்தை திருடியதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 29 அன்று நடந்த இச்சம்பவத்தை அடுத்து, ஒரு வாரம் கடந்த பின்னர் தமது சக ஊழியர் ஒருவரிடம் நடந்தவற்றை பகிர்ந்து கொள்ள, அவர் அவரது மேலாளரிடம் புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து துறை ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, மருத்துவர் கோகல் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மிகவும் அவசியம் தேவைப்படுபவர்களுக்கு பயன்படக்கூடிய தடுப்பு மருந்தை மருத்துவர் கோகல் திருடி தமது உறவினர்களுக்கு வழங்கியது, தமது கடமையில் இருந்து தவறியதாகவே பார்க்கப்படுகிறது.
மருத்துவர் கோகல் செய்தது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ள நிர்வாகம், அதற்கான தண்டனையை அவர் பெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், மருத்துவர் கோகல், தடுப்பு மருந்து வீணாகக் கூடாது என்பதாலையே, 9 டோஸ்களுக்கான மருந்தை தமக்கென எடுத்துக் கொண்டார் என்று சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
மருத்துவர் கோகல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் 4,000 டொலர் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.