உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா? விரிவான தகவல் இதோ
பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சிகள் உதவுவது உண்மைதான். குறிப்பாக, இதயப் பாதுகாப்புக்குத் தினமும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியமே. ஆனால், அதற்கும் ஓர் எல்லை உண்டு.
உடற்பயிற்சிக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் தசைப் பயிற்சிகள் உள்ளிட்ட சில தீவிரமான பயிற்சிகளால் (HIIT) 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு என்று கூறப்படுகின்றது.
உண்மையில் தீவிர உடற்பயிற்சி செய்வது யாருக்கு எல்லாம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்? இதற்கு என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
யாருக்கு வாய்ப்பு அதிகம்?
குடும்பப் பின்னணியில் மாரடைப்பு ஏற்பட்டவர்கள், இதயத் துடிப்பில் மாறுபாடு உள்ளவர்கள், இதய வீக்கம் இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம். நீரிழிவு, ரத்த மிகு கொலஸ்ட்ரால், மிகு தைராய்டு போன்ற பிரச்சினை உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள், பிறவியிலேயே இதய வால்வுகளிலும், இதயத் தமனிகளிலும், இதயத் தசையிலும் பிறழ்வுகள் உள்ளவர்கள் ஆகியோர் தங்கள் வயதுக்கு மீறித் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது மாரடைப்பு தூண்டப்பட வாய்ப்புண்டு.
காரணம் என்ன?
தீவிர உடற்பயிற்சி செய்யும்போது இதயத் தமனி உட்சுவர்களில் தீவிரமான உடற்பயிற்சிகளால் அழுத்தம் தரப்படும்போது, அந்தச் சுவர்கள் திடீரெனச் சுருங்கிவிடுகின்றன (Coronary artery spasm).
இதனால், இதயச் சுவர்களுக்கு ரத்தம் செல்வது குறைந்துவிடுகிறது. அடுத்ததாக, ‘கேட்டகாலமின்’ எனும் ஹார்மோன்கள் இந்தப் பயிற்சிகளின்போது மிக அதிகமாகச் சுரக்கின்றன. ரத்தத்தில் தனித்தனியாகச் சுற்ற வேண்டிய தட்டணுக்களை இவை திராட்சைக் கொத்துபோல் இணைத்துவிடுகின்றன.
இந்தக் கொத்துகள் இதயத் தமனிகளை அடைத்துவிடுகின்றன. மற்றொரு முக்கியக் காரணம், தீவிரமான பயிற்சிகளின்போது, இதயச் சுவர்களுக்குத் தேவையான ரத்தம் கடுமையாக அதிகரிக்கும். அதை ஈடுகட்ட இதயத் துடிப்பும் அதிகரிக்கும்.
ஏற்கெனவே இதயத் துடிப்பில் மாறுபாடு உள்ளவர்களுக்கும் இதய மின்னோட்டப் பகுதியில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பவர்களுக்கும் மற்றவர்களைவிட இதயத் துடிப்பு அதிகரிப்பதால், உடலில் உருவாகியிருக்கும் ரத்த உறைவுக் கட்டிகள் இடம்பெயர்ந்து, இதயத் தமனிகளுக்கு வந்து அடைத்துக்கொள்கின்றன. இப்படியான காரணிகளால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
- தீவிரமான உடற்பயிற்சிகள், பந்தய விளையாட்டுகள், பளு தூக்கும் பயிற்சிகள், ஓட்டப் பந்தயங்கள் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சிகளில் ஈடுபடும் முன், தங்களுடைய உடல் அவற்றுக்குத் தகுதியானதா என்பதை ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, ட்ரட்மில் போன்ற இதயத்துக்கான பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்குப் பிறகு, வருடத்துக்கு இரண்டு முறை இந்தப் பரிசோதனைகளை மறுபடியும் மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம்.
- பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கும்போதும் மருத்துவ ஆலோசனை அவசியம். அவரவர் வயது, உடல் தன்மையின் அடிப்படையில் பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம்.
- பொதுவாக, வாரத்தில் 5 மணி நேரம் மிதமான உடற்பயிற்சிகள் போதுமானவை. நீண்டநேரம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடுமையான பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் கீழ்க்காணும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது
- பயிற்சிகளைச் செய்யும்போது வாந்தி, கிறுகிறுப்பு, மயக்கம் ஏற்படுவது.
- நடுநெஞ்சில் ஏற்படும் வலி
- நெஞ்செரிச்சல்.
- மூச்சுவிடுவதில் சிரமம்.
- நெஞ்சு படபடப்பு.
- வழக்கத்தைவிட அதிக வியர்வை.
- பகலில் களைப்பு,
- செரிமானமின்மை போன்ற இனம் புரியாத நலக் குறைவு.
- இரவில் உறக்கமின்மை.