நம்ம ஊரில் நாய்கூட B.A பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது.., ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு
இப்போது நம்ம ஊரில் நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டமானது நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் நடத்தப்பட்டது.
ஆர்.எஸ்.பாரதி பேசியது
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல். இது எங்களுடைய குல பெருமையால் கிடைத்தது அல்ல, இந்த இயக்கம் போட்ட பிச்சை தான்.
திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால் இத்தனை பேர் டாக்டர் பட்டம் வாங்கிருக்க முடியாது.
நான் பட்டம் வாங்கிய காலத்தில் பி.ஏ. பட்டம் பெற்றால் பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். ஏனெனில் அப்போது ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும்.
ஆனால், தற்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது. இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்கு தான் நீட் வந்துள்ளது" என்றார்.
விளக்கம்
இவர் பேசியது சர்ச்சையான நிலையில் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், "என்னுடைய பேச்சின் நோக்கம் என்னவென்றால் சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம் என்பது தான்.
நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லவில்லை" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |